குறள் (Kural) - 30

குறள் (Kural) 30
குறள் #30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

பொருள்
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

Tamil Transliteration
Andhanar Enpor Aravormar Revvuyir Kkum
Sendhanmai Poontozhuka Laan.

மு.வரதராசனார்

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

கலைஞர்

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

பரிமேலழகர்

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.

ஞா.தேவநேயப் பாவாணர்

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் - எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டொழுகுதலால்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் துறவியரே. அந்தணர் என்னுஞ்சொல் அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொண்டு அன்பு செய்தல். இது துறவியர்க்கே இயலும். அதனால், அருளுடைமையைத் துறவுநிலைக்குரிய முதலறமாகக் குறித்தார் திருவள்ளுவர். தமக்கு வாழ்வளித்துக் காக்கும் தலைநாகரிக மக்களையுந் தாழ்வாகக் கருதும் தந்நல ஆணவப் பிராமணர் அந்தணராகார் என்பது, இதனால் அறிவிக்கப்பட்டது. பூணுதல் நோன்பாக மேற்கொள்ளுதல். 'என்போர்' செயப்பாட்டுவினை செய்வினையாக நின்றது; 'மற்று' அசைநிலை. உம்மை முற்றும்மை.

மணக்குடவர்

எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)நீத்தார் பெருமை (Neeththaar Perumai)