குறள் (Kural) - 28

குறள் (Kural) 28
குறள் #28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

பொருள்
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

Tamil Transliteration
Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum.

மு.வரதராசனார்

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா

நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

கலைஞர்

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

பரிமேலழகர்

நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நிறைமொழி மாந்தர் பெருமை - பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டிவிடும். இக்குறள், "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப". என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் ( 1484 ) தழுவியது. மறை மொழி அல்லது மந்திரம் என்பது, வாய்மொழியும் சாவிப்பும் என இருவகைப்படும். திருமூலரின் திருமந்திரமும், நம்மாழ்வாரின் திரு வாய்மொழியும் வாய்மொழிபோல்வன; கவுந்தியடிகள் காவிரித் தென்கரைச் சோலையொன்றில் வம்பப்பரத்தையும் வறுமொழியாளனுமான இருவரை நரிகளாக்கியது சாவிப்பு. மறை ( வேத ) த் தன்மையுடைய மொழி மறைமொழி ; மனத்திண்மையாற் கருதியது நிறை வேறும் மொழி மந்திரம் . மன் + திரம் = மந்திரம். முன்னுதல் = கருதுதல். முன் - மன். திரம் = திறம். ஒ.நோ : மன்று - மந்து - மந்தை. முரி - முறி ( வளை ). ஆரியர் வருகைக்கு முற்பட்டதும், எண்வகை வனப்பான பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுநிலத்திற்கும் இலக்கியமாயிருந்ததுமான முதலிரு கழகத் தூய தமிழிலக்கியம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதென அறிக.

மணக்குடவர்

நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)நீத்தார் பெருமை (Neeththaar Perumai)