குறள் (Kural) - 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
பொருள்
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
Tamil Transliteration
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku.
மு.வரதராசனார்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
சாலமன் பாப்பையா
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
கலைஞர்
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
பரிமேலழகர்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும்,பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்னும் பூதமூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்ந்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம். காட்சி ஒளியினால் தோன்றுதலின் ஒளியெனப்பட்டது. உறுவது ஊறு. உறுதலாவது உடம்பின் உள்ளும் புறம்பும் படுதல் அல்லது தொடுதல். உலக வழக்கில் தீய பொருளிலேயே வழங்கும் நாற்றம் என்னும் சொல், இங்கு நறுமைக்குந் தீமைக்கும் பொதுவாய் நின்றது. உகு - யுஜ் (வ). ஓதம் - யோக (வ.g). ஓகி - யோகின் (வ.g). ஐந்தின் கூறுபாடாவன, மேற்கூறிய பூதமூலம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய நிலம், நீர், தீ, வளி, (காற்று) வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றொடு தொடர்புடைய புலனைக் கொண்ட மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அறிவுப் பொறியைந்தும், அவற்றைப்போல் உடம்பின் கூறாகிய நாவு, கை, கால், அண்டி (எருவாய்) குறி (கருவாய்), கருமப்பொறி யைந்தும் ஆக இருபதுமாம். இனி, 'வகைதெரிவான் கட்டு' என்றதினால், தெரிகின்ற ஆதனும் (புருடனும்) , அவன் தெரிதற் கருவியாகிய மதி (மான்) தன்முனைப்பு (அகங்கார) மனங்களும், அவற்றிற்கு. முதலாகிய சித்தமும் (மூலப்பகுதியும்) பெறப்படும். இவற்றை ஆராயும் வகை : - ஆதன் தான் ஒன்றினின்று தோன்றாமையாலும் பிறிதொன்றைத் தோற்றுவியாமையாலும் தனிநிலையாம். மூல முதனிலை ( சித்தம் ) தான் ஒன்றினின்று தோன்றாமையால் முதனிலையாம். மதியும் அதனின்று தன்முனைப்பும் அதனின்று பூத மூலங்களுமாக ஏழும், மூல முதனிலையினின்று முறையே தோன்றுவதனாலும் மன முதலியவற்றைத் தோற்றுவித்தலாலும் இடைநிலையாம். மனமும் அறிவுப்பொறிகளும் கருமப்பொறிகளும் பூதங்களுமாகிய பதினாறும், இடைநிலையினின்று தோன்றுவதனாலும் வேறெவற்றையுந் தோற்றுவியாமையாலும் இறுதிநிலையாம். இனி, சாங்கியத்திற்கு மாறாக, அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு என்றமையால், எல்லாவற்றொடுங் கலந்துநின்று அவற்றையியக்கி முத்தொழிற்படுத்தும் இறைவனென்னும் முழு முதனிலையொடு சேர்க்க. மெய்ப்பொருள்கள் மொத்தம் இருபத்தாறாம். ஆகவே, "சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல்" என்பது தவறாம் துண்ணிய அடிப்படைப் பாகுபாட்டில், ஆவிவடிவான உயிராதனும் (சீவாத்துமாவும்) பரவாதனும் (பரமாத்துமாவும்) காற்றுள் அடங்குதலால், ஐந்தின் வகையென்று எல்லாவற்றையும் அடக்கினார் ஆசிரியர். வெளி என்னும் இடத்தின் உண்மை நீட்சி அல்லது தொடர்ச்சியே காலம். ஐம்பூதங்களும் அவற்றொடு தொடர்புள்ள பொறிபுலன்களும் பூதம் பூதத்தன்மை பொறி புலன் நிலம் நாற்றம் மூக்கு முகர்தல் நீர் சுவை வாய் சுவைத்தல் தீ ஒளி கண் காண்டல் வளி ஊறு மெய் உறுதல்(தொடுதல்) வெளி ஒசை செவி கேட்டல் "வகை தெரிவான் கட்டு" என்றது உடம்பொடு புணர்த்தல் என்னும் உத்தி ; அதாவது, ஒர் உண்மையை அல்லது நெறியை வெளிப்படையாகக் கூறாது ஒரு சொல்லாட்சியாற் பெறவைத்தல். கண்ணது - கட்டு ( கண் + து ). மூலப்பகுதியின் சேர்க்கையாற் கட்டுற்ற ஆதன் ( புருடன் ) அதைத்தன்னின் வேறாகக் காண்டலே வீடுபேறென்பது சாங்கியக் கொள்கை. அதிற் கடவுட் கொள்கையில்லை.
மணக்குடவர்
சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.
புலியூர்க் கேசிகன்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் (Paayiraviyal) |
அதிகாரம் (Adhigaram) | நீத்தார் பெருமை (Neeththaar Perumai) |