குறள் (Kural) - 264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
பொருள்
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.
Tamil Transliteration
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum.
மு.வரதராசனார்
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா
பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.
கலைஞர்
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.
பரிமேலழகர்
ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம். (முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார்
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒன்னார்த் தெறலும்- அறியாமையால் தமக்கு மாறாக வந்த வலியோரையுந் தீயோரையும் சாவித்தலும் ; உவந்தாரை ஆக்கலுங் - அறிந்ததினால் தம்மை விரும்பித் தம் உதவி நாடி வந்த எளியோரை வாழ்வித்தலும் ; எண்ணின் தவத்தான் வரும் - தவத்தோர் கருதுவாராயின் அவன் தவ வலிமையால் அவை கூடும். "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்". "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது". என்று ஏற்கெனவே துறவியரின் ஆக்க வழிப்பாற்றல் கூறப்பட்டிருத்தல் காண்க.
மணக்குடவர்
இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும். இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.
புலியூர்க் கேசிகன்
பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | தவம் (Thavam) |