குறள் (Kural) - 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
பொருள்
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.
Tamil Transliteration
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum.
மு.வரதராசனார்
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
சாலமன் பாப்பையா
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.
கலைஞர்
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.
பரிமேலழகர்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலால் - தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளையெல்லாம் விரும்பியவாறே பெறக்கூடிய நிலைமையிருத்தலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்ய வேண்டிய தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும். 'ஈண்டு முயலப்படும் ' என்றதனால் மறுமையிற் பயன்படும் என்பது பெறப்பட்டது. 'வேண்டிய' என்றவை மண்ணின்பமும் விண்ணின்பமும் வீட்டின்பமு மாகிய மூவகை யின்பங்கள். இல்லறத்தாலும் இம் மூன்றையும் பெறலாம். இவ்விரு வழிகளுள் ஒன்றைத் தெரிந்து கொள்வது அவரவர் ஆற்றலையும் விருப்பத்தையும் பொறுத்தது. அன்புடைமை , விருந்தோம்பல் , நடுநிலைமை, ஒப்புரவறிதல் , ஈகை முதலிய அறங்கள் ஆரியர் மேற்கொள்ளுதற்கு அரியனவாகலின், அவர் துறவறத்தையே விரும்புவர். அதனாலேயே, "மேற்கதி வீடுபேறுகள் தவத்தானன்றி எய்தப்படா" என்றார் பரிமேலழகர் . கூடா வொழுக்கமும் போலித் துறவும் பூண்டு கொண்டே ஒருவன் மெய்த்துறவிபோல் நடிக்கலாம். இந்நடிப்பு இல்லறத்தில் இயலாது.
மணக்குடவர்
விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும். இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
புலியூர்க் கேசிகன்
வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | தவம் (Thavam) |