குறள் (Kural) - 263

குறள் (Kural) 263
குறள் #263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

பொருள்
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.

Tamil Transliteration
Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol
Matrai Yavarkal Thavam.

மு.வரதராசனார்

துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ.

சாலமன் பாப்பையா

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

கலைஞர்

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.

பரிமேலழகர்

மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மற்றை யவர்கள் - துறவிய ரல்லாத மற்ற இல்லறத்தார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார் கொல்-துறவியர்க்கு ஊணுடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்துதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்! துத்தல் உண்ணுதல் அல்லது நுகர்தல். துப்பரவு நுகரப்படும் பொருள்கள். தவம் சிறந்ததே யாயினும் , எல்லாருந் துறவியராயின் தவஞ் செய்வார்க்கு இன்றியமையாதவற்றை உதவுவார் ஒருவருமில்லாது போய் விடுவராதலின்,அவ்வுண்மையை ஓர் ஐயந்தழுவிய தற்குறிப் பேற்ற அணியால் உணர்த்தினார். 'கொல்' ஐயம்.

மணக்குடவர்

துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.

புலியூர்க் கேசிகன்

துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவுநெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)தவம் (Thavam)