குறள் (Kural) - 262

குறள் (Kural) 262
குறள் #262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

பொருள்
உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

Tamil Transliteration
Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai
Aqdhilaar Merkol Vadhu.

மு.வரதராசனார்

தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

சாலமன் பாப்பையா

முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.

கலைஞர்

உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

பரிமேலழகர்

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே யுண்டாகும் ; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆதலால் , அத் தவத்தை முறபிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம். தவம் பல பிறப்புக்களில் தொடர்ந்து செய்ய வேண்டிய அரும் பெரு முயற்சி யாதலாலும், அறிவும் ஆற்றலும் உடையவரே அதை முற்ற முடியச் செய்யத்தக்கவராதலாலும், ஒரே பிறப்பில் எல்லாரும் அதை மேற்கொள்ள முடியாதாம்.

மணக்குடவர்

தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.

புலியூர்க் கேசிகன்

தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)தவம் (Thavam)