குறள் (Kural) - 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
பொருள்
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும்.
Tamil Transliteration
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai
Atre Thavaththir Kuru.
மு.வரதராசனார்
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்.
சாலமன் பாப்பையா
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.
கலைஞர்
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.
பரிமேலழகர்
தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும் , பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையுமாகிய அவ்வளவே; தவத்திற்கு உரு - தவத்தின் வடிவாம். இத்தவ விலக்கணம் தொகுத்துக் கூறல் என்னும் உத்தி பற்றியது. ஏகாரம் தேற்றம்.
மணக்குடவர்
தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.
புலியூர்க் கேசிகன்
தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | தவம் (Thavam) |