குறள் (Kural) - 260

குறள் (Kural) 260
குறள் #260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

பொருள்
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

Tamil Transliteration
Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum.

மு.வரதராசனார்

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

சாலமன் பாப்பையா

எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

கலைஞர்

புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

பரிமேலழகர்

கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கொல்லான் புலாலை மறுத்தானை - ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர். கொல்லாதவன் புலாலுண்பவனாகவும் புலாலுண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலா மாதலால், அவற்றால் பயினின்மை கருதி ஈரறங்களையும் உடன் கூறினார். கைகூப்பித் தொழுதல் மற்ற வுயிர்கட் கியையாமையின் மக்களுயிர் எனக் கொள்ளப்பட்டது. உயிர் என்பது சொல்லால் அஃறிணை யாதலின், பல்லோர் படர்க்கையிற் செல்லாச் செய்யுமென்னும் முற்று இங்குச் செல்வதாயிற்று. ஈரறங்களையுங் கடைப்பிடிப்பார் , மறுமையில் (தேவர் நிலையில் ) மட்டு மன்றி இம்மையில் மக்கள் நிலையிலும் பிறரால் தெய்வமாக மதிக்கப் படுவர் என்பது கருத்து.

மணக்குடவர்

கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும். மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென் றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.

புலியூர்க் கேசிகன்

கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)புலால் மறுத்தல் (Pulaanmaruththal)