குறள் (Kural) - 259

குறள் (Kural) 259
குறள் #259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

பொருள்
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

Tamil Transliteration
Avisorin Thaayiram Vettalin Ondran
Uyirsekuth Thunnaamai Nandru.

மு.வரதராசனார்

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா

(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

கலைஞர்

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

பரிமேலழகர்

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய வுணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி உடம்பைத் தின்னாமை நன்றாம். ஆரிய வேள்விகள் கொலை வேள்விகளாதலானும், ஆயிரம் வேள்விப் பயனினும் ஓருயிரியைக் கொல்லாமையின் பயன் பெரிதென்றமையானும், அவை விலக்கப்பட்டனவாம். பாட வேறுபாடு: அவிசொரிந் தாயிரம் வேட்டலன் றொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. இப்பாடம், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலன்று ; ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமையே நன்று என்று பொருள் தருதல் காண்க. இதில் ஏகாரம் தொக்கது

மணக்குடவர்

நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

புலியூர்க் கேசிகன்

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)புலால் மறுத்தல் (Pulaanmaruththal)