குறள் (Kural) - 258

குறள் (Kural) 258
குறள் #258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

பொருள்
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

Tamil Transliteration
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon.

மு.வரதராசனார்

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

சாலமன் பாப்பையா

பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

கலைஞர்

மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

பரிமேலழகர்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; உயிரின் தலைப் பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரினின்று நீங்கிய வுடம்பை உண்ணார். உயிரினின்று நீங்கியது பிண மென்று உணர்தலின் உண்ணா ரென்றார். 'தலைப்பிரிதல்' என்பது ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல். மயக்கம் ஐயமுந் திரிபும்.

மணக்குடவர்

குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.

புலியூர்க் கேசிகன்

பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)புலால் மறுத்தல் (Pulaanmaruththal)