குறள் (Kural) - 257

குறள் (Kural) 257
குறள் #257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

பொருள்
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

Tamil Transliteration
Unnaamai Ventum Pulaaal Piridhondran
Punnadhu Unarvaarp Perin.

மு.வரதராசனார்

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

சாலமன் பாப்பையா

இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

கலைஞர்

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

பரிமேலழகர்

புலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

புலால் பிறிது ஒன்றன் புண் - புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அவ்வுண்மையை அறியப் பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும். உண்மையை உணர்தலாவது நோய்ப்பட்டதென்றும் துப்புர வற்றதென்றும் அருவருப்பானதென்றும் அறிதல். அங்ஙனம் அறியின் உண்ணாரென்பது கருத்து. 'புலாஅல்' இசை நிறையளபெடை. அது வுணர்வார் என்பதின் வகர வுடம்படுமெய் தொக்கது.

மணக்குடவர்

உயிர் நிலையைப் பெறுதல் ஊனை யுண்ணாமையினால் உள்ளது; ஊனையுண்ண உண்டாரை எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது. அங்காவாமை- புறப்பட விடாமை.

புலியூர்க் கேசிகன்

புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உண்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)புலால் மறுத்தல் (Pulaanmaruththal)