குறள் (Kural) - 228

குறள் (Kural) 228
குறள் #228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

பொருள்
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.

Tamil Transliteration
Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar.

மு.வரதராசனார்

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

சாலமன் பாப்பையா

இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.

கலைஞர்

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.

பரிமேலழகர்

தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்காரராலும் இழக்கும் கன்னெஞ்சர்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல்-வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ! அறிந்தாராயின், தாம்வைத்திழந்து வருந்தாது வறியார்க்கீந்து மகிழ்ந்து மறுமையிலும் இன்புறுவர் என்பது கருத்து. 'கொல்' ஐயம்.

மணக்குடவர்

கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர். இஃது இடார் இழப்பரென்றது.

புலியூர்க் கேசிகன்

தாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஈகை (Eekai)