குறள் (Kural) - 229

குறள் (Kural) 229
குறள் #229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

பொருள்
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

Tamil Transliteration
Iraththalin Innaadhu Mandra Nirappiya
Thaame Thamiyar Unal.

மு.வரதராசனார்

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

கலைஞர்

பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

பரிமேலழகர்

நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நிரப்பிய தாமே தமியர் உணல்-தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; மன்ற-திண்ணமாக; இரத்தலின் இன்னாது-இரத்திலினும் தீயதாம். ஆசைக்கோரளவில்லை யாதலின், ஈயாத கஞ்சர் மேன்மேலும் பொருளீட்டற் பொருட்டு இடைவிடாது உடலையும் உள்ளத்தையும் வருத்தி, எத்துணைப் பொருளீட்டினும் எள்ளளவும் பொந்திகை (திருப்தி) யின்மையால் உண்மையிற் செல்வராயினும் உள்ளத்தில் வறியராய், இன்பமும் அறப்பயனும் ஒருங்கே தரும் பாத்துண்டலின்றி நடைப்பிணமாய் உழல்வதினும்; ஆசையுங் கவலையுமில்லாத இரப்போர் உடல் வருத்தமின்றித் தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்வதோடு, தாம் இரப்பெடுத்ததையும் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை மேலாதலின்; 'இரத்தலினின்னாது' என்றார். 'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல் . 'நிரப்பிய' செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்.

மணக்குடவர்

இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.

புலியூர்க் கேசிகன்

தாம் முயன்று தேடி நிரப்பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலை விடத் துன்பம் தருவதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஈகை (Eekai)