குறள் (Kural) - 227

குறள் (Kural) 227
குறள் #227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

பொருள்
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

Tamil Transliteration
Paaththoon Mareei Yavanaip Pasiyennum
Theeppini Theental Aridhu.

மு.வரதராசனார்

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

சாலமன் பாப்பையா

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

கலைஞர்

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

பரிமேலழகர்

பாத்து ஊண் மரீஇயவனை - எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பாத்து ஊண் மரீஇ யவனை-எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசியென்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதலில்லை. நாள்தோறும் வந்து வருத்துவதாலும், நல்லார் வல்லாருட்பட எல்லாரையுந் தாக்குவதாலும், எம்மருந்தாலும் அறவே நீக்கப்படாமையாலும், பிற நோய்கள் அழிக்காதவற்றையும் அழித்து மறுமையிலுந் துன்புற வழிகோலுவதாலும், பசி தீப்பிணி யெனப் பட்டது . "இறைக்க வூறும் மணற் கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம் ." ஆதலின், பாத்துண்டு பயின்றவனைப் பசிப்பிணி தீண்டுவதில்லை. தீண்டுவதுமில்லை யெனவே வருத்தாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. 'மரீஇ' (மருவி) இன்னிசையளபெடை. அரிது என்பது இங்கு இன்மைப் பொருளது.

மணக்குடவர்

பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை. இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூ

புலியூர்க் கேசிகன்

பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் ‘பசி’ என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஈகை (Eekai)