குறள் (Kural) - 226

குறள் (Kural) 226
குறள் #226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பொருள்
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

Tamil Transliteration
Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi.

மு.வரதராசனார்

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

சாலமன் பாப்பையா

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

கலைஞர்

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

பரிமேலழகர்

எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருள்பெற்றவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமும் ஆகும்

ஞா.தேவநேயப் பாவாணர்

அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியவரின் கடும்பசியைத் தீர்க்க; அஃது ஒருவன் பொருள் வைப்புழி பெற்றான்-அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் (Savings Bank) பெற்றானாவன். கொல்வது போல வருத்துவதனாலும், குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைமை முதலிய பேறுகளையும் பண்புகளையும் அழிப்பதனாலும், கடும்பசி அழிபசி யெனப்பட்டது. வறியவரின் பசியைத் தீர்த்தற்குச் செலவிட்ட பொருள் பின்பு தனக்கே வந்துதவுதலால் அருள் நோக்கிச் செய்யாவிடினும் தனக்குப் பயன்படும் அறம் நோக்கியேனும் அதைச்செய்க என்றவாறு. 'தீர்த்தல்' தல்லீற்று வியங்கோள். பெற்றான் என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. அஃதொருவன் என்பது அதுவொருவன் என்றும் இருக்கலாம். அடுத்த அதிகார முதற் குறளில் 'வாழ்தலதுவல்லது' என வருதல் காண்க.

மணக்குடவர்

பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம். இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.

புலியூர்க் கேசிகன்

எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருள்பெற்றவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமும் ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஈகை (Eekai)