குறள் (Kural) - 1

குறள் (Kural) 1
குறள் #1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

Tamil Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku.

மு.வரதராசனார்

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர்

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்உயிர்களுக்கு முதன்மை.

பரிமேலழகர்

எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது. இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க. பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ். பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக் குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே. ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க. ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம். ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு, "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்." என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று. அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது. உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும். [அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206) மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989). 'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் - செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான் தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன. ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம் குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே. பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்: பதிப்பாசிரியர்.]

மணக்குடவர்

எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

புலியூர்க் கேசிகன்

அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.

திருக்குறளார் வீ. முனிசாமி

உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu)