குறள் (Kural) - 1326

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
பொருள்
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
Tamil Transliteration
Unalinum Untadhu Aralinidhu Kaamam
Punardhalin Ootal Inidhu.
மு.வரதராசனார்
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
சாலமன் பாப்பையா
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
கலைஞர்
உணலினும் உண்டது அறல்இனிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உணலினும் உண்டது அறல் இனிது- மாந்தர்க்கு உணவுத்துறையில், பின்னுண்பதினும் முன்னுண்டது செரித்தல் இன்பந்தருவதாம்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோல அவர்க்குக் காமவின்பத் துறையில் , மேற்புணர்வதினும் முன்னைத் தவறுபற்றி மகளிரூடுதல் இன்பந்தருவதாம். பசித் துண்ணுமிடத்து இன்சுவைத்தும் மிகவுண்ணலுமாயிருத்தல்போல், ஊடலாற் பிரிந்து கூடுமிடத்துப் பேரின்பத்தும், ஆராமையுள்ளது மாயிருக்குமென்று தன் பட்டறிவு கூறியவாறு.
மணக்குடவர்
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
புலியூர்க் கேசிகன்
உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும்; அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தை விட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது!
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஊடலுவகை (Ootaluvakai) |