குறள் (Kural) - 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்
பொருள்
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.
Tamil Transliteration
Ootalil Thotravar Vendraar Adhumannum
Kootalir Kaanap Patum.
மு.வரதராசனார்
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.
சாலமன் பாப்பையா
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
கலைஞர்
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஊடலில் தோற்றவர் வென்றார் - ஊடலில் தோற்ற மகளிர் வென்றவராவர்; அது மன்னும் கூடலிற் காணப்படும்- அவ்வெற்றி மிகுதியும் பின்னர்ப் புணர்ச்சிக்கண் அவரால் அறியப்படும். தோற்றவர் ஊடலைக் கடைப்பிடிக்காது இடையில் விட்டு விட்டவர். அவர் கலவிக்கண் பேரின்பம் பெறுதலால் வென்றாராயினர். 'மன்' மிகுதிப் பொருளது.தலைமகன் கலவியால் பேரின்பம் பேறும்போதே தலைமகளும் பெறுதல் கண்டானாதலாலும், அவள் ஊடல் நீங்கிய பொழுது ஒருவகைத் தோல்வி மனப்பான்மை கொண்டிருந்ததனாலும் , அவளைப் பாராட்டி ஊக்குமுகமாகத் 'தோற்றவர் வென்றார்' என்றான். ஊடல் ஆடவருக்கின்மையின், தலைமகன் ஊடலில் தோற்றானென்று கூறுவது பெருந்திணையாகுமேயன்றி அன்பினைந்திணையாகாதென அறிக. அடுத்த குறளையும் பார்க்க.
மணக்குடவர்
ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.
புலியூர்க் கேசிகன்
ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த உண்மையானது, ஊடல் தெளிந்தபின், அவர் கூடி மகிழும் தன்மையிலே தெளிவாகக் காணப்படும்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஊடலுவகை (Ootaluvakai) |