குறள் (Kural) - 1325

குறள் (Kural) 1325
குறள் #1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து

பொருள்
தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.

Tamil Transliteration
Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol
Akaralin Aangon Rutaiththu.

மு.வரதராசனார்

தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.

சாலமன் பாப்பையா

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

கலைஞர்

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து.

பரிமேலழகர்

(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தவறு இலராயினும் தாம் வீழ்வார் மெல்தோள் அகறலின் - ஆடவர் தம்மிடத்துத் தவறல்லாதவராயினும் உடையார்போல வூடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களினின்று சிறிது போழ்து நீங்கியிருத்தலால்; ஆங்கு ஒன்று உடைத்து அவ்வூடல் அவர்க்கு அத்தகையதோரின்பம் பயத்தலுடையது. ஆடவர்பால் தவறிருப்பினும் இல்லாவிடினும் ஊடலெல்லாம் உணர்த்தப்பட்டுப் பேரின்பம் கூடலில் முடிவதால், அதனால் எவ்கையிலுங் கேடில்லையென்பான் 'தவறிலராயினும்' என்றும் , அதனாலுண்டாகும் இன்பம் சொல்லொணாது அளவிறத்தலின் 'ஆங்கொன்று' என்றும் , கூறினான். தவறின்றி யூடியதும் எனக்கின்பமாயிற் றென்பதாம்.

மணக்குடவர்

தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.

புலியூர்க் கேசிகன்

தவறு இல்லாதவரான போதும், தம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை உடலால் நீங்கியிருக்கும் போது, உடலிலும் ஓர் இன்பம் உள்ளது

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)ஊடலுவகை (Ootaluvakai)