குறள் (Kural) - 1307

குறள் (Kural) 1307
குறள் #1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

பொருள்
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.

Tamil Transliteration
Ootalin Untaangor Thunpam Punarvadhu
Neetuva Thandru Kol Endru.

மு.வரதராசனார்

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா

இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

கலைஞர்

கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.

பரிமேலழகர்

(இதுவும் அது.) புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று - இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

புணர்வது நீடுவது(கொல்) அன்றுகொல் என்று-இனிப் புணர்ச்சி காலந்தாழ்க்குமோ தாழ்க்காதோ என்று கருதுதலால் ; ஊடலின் ஒர் துன்பம் உண்டு-இன்பத்திற்கேதுவான ஊடலிலும் ஒரு துன்பமுள்ளதாம். விரைந்து கூடற்கேதுவான ஊடலே பயன்தருவதென்பதாம் . கருதுதலால் என்பது அவாய்நிலையால் வந்தது . -சிறப்பும்மை தொக்கது . ' கொல்' முன்னுங் கூட்டப்பட்டது . ' ஆங்கு ' அசைநிலை.

மணக்குடவர்

குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.

புலியூர்க் கேசிகன்

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது, ‘கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ’ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புலவி (Pulavi)