குறள் (Kural) - 1306

குறள் (Kural) 1306
குறள் #1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

பொருள்
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

Tamil Transliteration
Thuniyum Pulaviyum Illaayin Kaamam
Kaniyum Karukkaayum Atru.

மு.வரதராசனார்

பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

சாலமன் பாப்பையா

வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.

கலைஞர்

பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். (மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

துனியும் புலவியும் இல்லாயின்-முதிர்ந்த சடைவாகிய துனியும் அளவான சடைவாகிய புலவியும் இல்லாவிடின் ; காமம் கனியும் கருக்காயும் அற்று-காம வின்பம் முறையே நன்றாகப் பழுத்த பழமும் பழுக்காத கன்னற் காயும் போல்வதாம் . காம வின்பம் ஊடல் , புலவி , துனி என்னும் மூவகைச் சடைவு நிலையிலும் முறையே கன்னற்காய் , பழம், அளியல் என்னும மூவகைப் பதங் கொள்ளும் பழுக்காத கன்னற்காய்ப் பதமும் மிகப் பழுத்த அளியற் பதமும் சுவை யின்றி வலுத்தும் சுவை கெட்டு அளிந்தும் இருக்குமாதலின் ,இடை நின்ற கனிப் பதமே மென்மையும் இனிமையுங் கொண்டு இன்பந் தருவதாம் . ஆதலால் , அளவாக வுப்பமைந்தது போன்ற புலவி நிலையே இனிதான கனி போல் இன்பந் தருவதற் கேற்ற தென்பதாம் .

மணக்குடவர்

உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால். இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.

புலியூர்க் கேசிகன்

பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புலவி (Pulavi)