குறள் (Kural) - 1308

குறள் (Kural) 1308
குறள் #1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

பொருள்
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.

Tamil Transliteration
Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum
Kaadhalar Illaa Vazhi.

மு.வரதராசனார்

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா

இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.

கலைஞர்

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.

பரிமேலழகர்

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்? ('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

(உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் நொந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி - இவர் நம் செயல் பற்றி நொந்தாரென்று அந்நோவினையறியும் அன்புடையார் இல்லாதவிடத்து ; நோதல் எவன் - ஒருவர் நொந்து என்ன பயன் ? இவள் நம் காதலியல்லள் .ஆகலால் நம் நோவறியாள் . ஆகவே, நாம் நோவதாற் பயனில்லை யெனத் தன் ஆற்றாமையுணர்த்தியவாறு. அறிதல்-அறிந்து ஊடல் தீர்தல் மற்று-அசைநிலை .

மணக்குடவர்

யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து. இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம் புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.

புலியூர்க் கேசிகன்

‘நம்மாலே இவரும் நோயுற்றார்’ என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாத போது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புலவி (Pulavi)