குறள் (Kural) - 1299

குறள் (Kural) 1299
குறள் #1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

பொருள்
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?.

Tamil Transliteration
Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya
Nenjan Thunaiyal Vazhi.

மு.வரதராசனார்

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?.

சாலமன் பாப்பையா

ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?.

கலைஞர்

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?.

பரிமேலழகர்

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை (ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு -ஒருவர்க்குத் துன்பம் வந்தவிடத்து அதை நீக்குதற்கு ; தாம் உடைய நெஞ்சம் துணையல்வழி- தம்முடன் பிறந்து தம் முறுப்பாக இரண்டறக் கலந்திருப்பதும் தமக்குதவ முழுக்கடைமைப்பட்டிருப்பதுமான உள்ளமே துணையாயிருந்து உதவாத விடத்து ; யாரே துணையாவார் - வேறுயார்தான் துணையாக வந்து உதவுவார்? துன்பம் என்றது இங்கு உணர்ப்புவயின் வாரா ஊடலை . அஃதாவது தலைமகன் தெளிவிக்கவுந் தெளியாத தலைமகள் சடைவை . அதற்கு நெஞ்சந் துணையாகாமையாவது , அவளை யன்பிலளென்று விட்டு நீங்காது அவளோடு கூடற்கண் விதும்பல் . வாழ்க்கைத்துணையும் எனக்குத் துணையாகாது என் அந்தக்கரணமும் எனக்குத் துணையாகாது போனபின் , நான் இத்துன்பத்தை எங்ஙனந் தாங்குவேன் என்பதாம் . ஏகாரம் பிரிநிலை.

மணக்குடவர்

துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ? தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து. இது தலைமகள் துணையாவார் யாரென்ற தோழிக்குக் கூறியது.

புலியூர்க் கேசிகன்

தாம் உரியதாக அடைந்திருக்கும் நம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில், வேறு எவர் தாம் துணையாவார்கள்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal)