குறள் (Kural) - 1298

குறள் (Kural) 1298
குறள் #1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பொருள்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

Tamil Transliteration
Ellin Ilivaamendru Enni Avardhiram
Ullum Uyirkkaadhal Nenju.

மு.வரதராசனார்

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

சாலமன் பாப்பையா

உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

கலைஞர்

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது. (எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உயிர்க் காதல் நெஞ்சு-உயிர்மேற் காதலையுடைய என் உள்ளம் ; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி-நம்மைப் பொருட்படுத்தாது சென்றாரென்று நம் கணவரை நாமும் பொருட்படுத்தாதிருப் போமாயின் பின் நமக்கு இழிவாம் என்று கருதி ; அவர் திறம் உள்ளும்-அவர் பக்கமே நினைக்கும். எள்ளுதல் வாயில் மறுத்தல்,அஃதாவது தலைமகள் புலவியைத் தீர்க்குமாறு தலைமகன் விடுத்த தோழி , பாங்கன் , பாணன் , புலவன் முதலியோரை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தல் . இளிவு ,பணியாமையாலும் பிரிவாற்றாமையாலும் அழகும்நிறையும் நாணும் இழத்தலாலும் நேர்வது , திறம் , வாயில் நேர்தலும் புலவிதீர்தலும் கூடலும் முதலியன. இளிவிற் கஞ்சுதலாலும் இறந்து படமாட்டாமையாலும் கூடக் கருதுகின்ற தென்பதாம் . இறந்து படவிரும்பாமை ' உயிர்க்காதல் நெஞ்சு' என்றதால் அறியப்படும்.

மணக்குடவர்

அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு? இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றது மில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.

புலியூர்க் கேசிகன்

‘பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும்’ என்று நினைத்து, அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சம், அவரது உயர் பண்புகளையே நினைக்கிறதே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal)