குறள் (Kural) - 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
பொருள்
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
Tamil Transliteration
Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya
Nenjam Thamaral Vazhi.
மு.வரதராசனார்
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
சாலமன் பாப்பையா
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
கலைஞர்
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
தாம்உடைய நெஞ்சம் தமர் அல்வழி-நம் உறுப்பாகவுள்ள உள்ளமே ஒருவர்க்கு உறவல்லாத விடத்து; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம்-அயலார் உறவல்லாதவராக இருத்தல் மிக எளிதாகக் காணக்கூடிய செய்தியே யாகும். புறத்தி யொருத்தியைக் காதலியென்று கருதி என் உள்ளமே என்னை வருத்தும்போது, அப்புறத்தி புலக்கின்றதில் என்னை வியப்புள்ளது என்பதாம், ’தமர்’ ஆகுபொருளி. ’தஞ்சம்’ எளிமைப் பொருளிடைச் சொல். தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே ." (தொல். சொல். இடை. 18.)
மணக்குடவர்
தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?
புலியூர்க் கேசிகன்
தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாத போது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) |