குறள் (Kural) - 1297

குறள் (Kural) 1297
குறள் #1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

பொருள்
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.

Tamil Transliteration
Naanum Marandhen Avarmarak Kallaaen
Maanaa Matanenjir Pattu.

மு.வரதராசனார்

காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

சாலமன் பாப்பையா

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

கலைஞர்

அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். (மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு-தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லா மடநெஞ்சின் சேர்க்கையினால் ; நாணும்மறந்தேன்-என் உயிரினுஞ் சிறந்த நாணையும் மறந்துவிட்டேன். மாணாமை மானத்தைக் காத்துக்கொள்ளாமை . மடமை,கண்டபோது நினைத்துக் காணாதபோது மறக்கவேண்டிய தவற்றைக் காணாதபோது நினைத்துக் கண்டபோது மறத்தல். நாண் , பல்லாண்டு கூடியொழுகிய பின்பும் அன்று கண்டாற்போல் உள்ளமும் உடம்பும் ஒடுங்குதல். எஞ்ஞான்று மெங்கணவ ரெந்தோள்மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் (நாலடி.385) கண்டபொழுதே புணர்ச்சி விதும்பலால் ' நாணும் மறந்தேன் ' என்றாள். உம்மை உயர்வு சிறப்பு.

மணக்குடவர்

என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.

புலியூர்க் கேசிகன்

காதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal)