குறள் (Kural) - 1296

குறள் (Kural) 1296
குறள் #1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

பொருள்
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

Tamil Transliteration
Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith
Thiniya Irundhadhen Nenju.

மு.வரதராசனார்

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

சாலமன் பாப்பையா

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

கலைஞர்

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தனியே இருந்து நினைத்தக்கால்-காதலரைப் பிரிந்திருந்து அவர் செய்த கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால் ; என்னைத் தினிய என் நெஞ்சு இருந்தது-என்னைப் பிய்த்துத் தின்பதுபோல் துன்பஞ் செய்தற்கே என்உள்ளம் என்னொடுகூட இருந்தது. என் நெஞ்சு என்னோடிருந்தது.அவர் செய்த கொடுமைகளை எண்ணி எனக்கு ஆற்றாமைமேலுந் துன்பஞ் செய்தற்கேயன்றி , இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன் றென்பதாம்.

மணக்குடவர்

என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது. இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.

புலியூர்க் கேசிகன்

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்த போது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பது போலத் துன்பம் தருவதாக இருந்தது!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal)