குறள் (Kural) - 1293

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
பொருள்
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?.
Tamil Transliteration
Kettaarkku Nattaaril Enpadho Nenjenee
Pettaangu Avarpin Selal.
மு.வரதராசனார்
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?.
சாலமன் பாப்பையா
நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?.
கலைஞர்
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?.
பரிமேலழகர்
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக. ('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நெஞ்சே-என் உள்ளமே!; நீ பெட்டாங்கு அவர் பின் செலல்-என்னிடத்து நில்லாது நீ விரும்பியவாறே அவரிடஞ் செல்லுதற்குக் கரணியம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ- நொடித்தவர்க்கு உறவில்லை என்னும் உலக நடப்போ , வேறோ? சொல்வாயாக. என் கட்டிற் கடங்காது செல்கின்றா யென்பாள் ' பெட்டாங்கு ' என்றும் , தான் மான மிழந்தமையின் ' கெட்டார்க்கு' என்றும் , தன் வயமின்றிப் பிறர் வயப்படுதல் அடிமைத்தனம் என்பாள் ' பின் செலல் ' என்றும் , கூறினாள் . உடன் பிறந்து உடன் வாழும் உள்ளமும் உதவாதநிலையில் உள்ளேன் என்பதாம் . பெட்டஆங்கு பெட்டாங்கு.
மணக்குடவர்
நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?.
புலியூர்க் கேசிகன்
நெஞ்சமே! நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப் போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ?
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) |