குறள் (Kural) - 1294

குறள் (Kural) 1294
குறள் #1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

பொருள்
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

Tamil Transliteration
Inianna Ninnotu Soozhvaaryaar Nenje
Thuniseydhu Thuvvaaikaan Matru.

மு.வரதராசனார்

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?.

சாலமன் பாப்பையா

நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

கலைஞர்

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

பரிமேலழகர்

(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள். 'காண' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நெஞ்சே-என் உள்ளமே!; துனிசெய்து மற்றுத் துவ்வாய்-கணவரைக் கண்டால் அவர் தவறு நோக்கி முன்பு ஊடி அதை அளவறிந்து நீக்கி அதன் பின்பு கூடக் கருதாய் . கண்டவுடன் இன்பம் நுகரக் கருதுகின்றாய் ; இனி அன்ன நின்னொடு யார் சூழ்வார்-ஆதலால்,இனி அத்தகைய செய்திகளை உன்னோடு கூடி யார் எண்ணுவார்? நான் இனி எண்ணேன். முன்னெல்லாம் புலப்பதாக விருந்து இன்று புணர்ச்சி விதும்புதலின் இவ்வாறு கூறினாள் . ' அன்ன' என்றது ஊடும் அல்லது புலக்குந் திறங்களை , ' காண்' உரையசை 'மற்று' பின்மைப் பொருளது .

மணக்குடவர்

நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.

புலியூர்க் கேசிகன்

நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ?

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal)