குறள் (Kural) - 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
பொருள்
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
Tamil Transliteration
Uraaa Thavarkkanta Kannum Avaraich
Cheraaarenach Cheriyen Nenju.
மு.வரதராசனார்
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.
சாலமன் பாப்பையா
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!.
கலைஞர்
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
பரிமேலழகர்
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?('அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
என் நெஞ்சு-என் உள்ளமே!; உறாதவர்க் கண்ட கண்ணும்-கணவர் இன்று நம்மாட்டு அன்பில்லாதவர் என்று அறிந்த பின்பும் ; செறார் என அவரைச் சேறி-நாம் அவரிடஞ் சென்றால் சினவாமற் சேர்த்துக்கொள்வாரென்று கருதி அவர்பாற் செல்லுகின்றாய் ; இதுபோலும் மடமை வேறுண்டோ! பழங்காதல் நோக்கிச் செல்கின்றாய் . நீகருதியது நிறை வேறுமோ வென்பதாம் . ' அவரை' வேற்றுமை மயக்கம் ; இரண்டாவது ஏழாவதில் மயங்கிற்று.'உறாஅ' இசைநிறை யளபெடை. செறாஅர்' எதுகை பற்றி வந்த இன்னிசை யளபெடை.
மணக்குடவர்
என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய். இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது.
புலியூர்க் கேசிகன்
என் நெஞ்சமே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்ட போதும், அவர் வெறுக்க மாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே! அதுதான் எதனாலோ?
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) |