குறள் (Kural) - 1291

குறள் (Kural) 1291
குறள் #1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

பொருள்
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.

Tamil Transliteration
Avarnenju Avarkkaadhal Kantum Evannenje
Neeemakku Aakaa Thadhu.

மு.வரதராசனார்

நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?.

சாலமன் பாப்பையா

நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?.

கலைஞர்

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.

பரிமேலழகர்

(தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகன்கண் தவறுண்டாய விடத்தும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சே-என் உள்ளமே!; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும்-அவருடைய உள்ளம் நம்மை நினையாது. அவருக்கே யுதவுதல் கண்டபின்பும் ; நீ எமக்கு ஆகாதது எவன்- நீ எமக்கு உதவாது அவரையே நினைத்தற்குக் கரணியம் யாது? பிறர் நமக்குதவாது எப்போதுந் தன்னலமாகவே யிருக்கும் போது , நீ மட்டும் ஏன் தன்னலம் பேணாது பிறர் நலத்தையே நோக்குகின்றாய் என்பதாம் . அவர்க்காதல் அவர் கருதியதற் குடம் படுதல் . ' எமக்காகாதது ' என்றது புலவிக் குடம்படாமையை.

மணக்குடவர்

அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ? இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.

புலியூர்க் கேசிகன்

நெஞ்சமே! அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பின்னரும், நீதான் எமக்குத் துணையாகாதது தான் எதனாலோ?

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal)