குறள் (Kural) - 1290

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
பொருள்
விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.
Tamil Transliteration
Kannin Thuniththe Kalanginaal Pulludhal
Enninum Thaanvidhup Putru.
மு.வரதராசனார்
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
சாலமன் பாப்பையா
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.
கலைஞர்
விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
கண்ணின் துனித்தே-முன்னொருநாள் தழுவல் விதுப்பினாற் சென்ற என்னொடு கண்ணளவாக மட்டும் காதலியூடி; என்னினும் தான் புல்லுதல் விதுப்புற்றுக் கலங்கினாள்-என்னினும தான் தழுவல் விதுப்புற்றதினால் அக் கண்ணளவூடலையும் மறந்து அப்பொழுதே கூடிவிட்டாள் . அதனால் , யான் இத்தன்மையேனாய் ஏங்கிநிற்கவும் விதுப்பின்றி யூடிநிற்கின்ற இவள் அவளல்லள். கண்ணளவாக வூடுதல் சொல் நிகழ்ச்சியின்றிக் கண்சிவத்தல்.அவளாயின் ஊடற்கண் நீடாமை பயன் . ஏகாரம் பிரிநிலை.
மணக்குடவர்
கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
புலியூர்க் கேசிகன்
கண் நோக்கத் தளவிலே பிணங்கினாள்; பின், என்னைக் காட்டிலும் தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal) |