குறள் (Kural) - 1287

குறள் (Kural) 1287
குறள் #1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொருள்
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

Tamil Transliteration
Uyththal Arindhu Punalpaai Pavarepol
Poiththal Arindhen Pulandhu.

மு.வரதராசனார்

வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?.

சாலமன் பாப்பையா

தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.

கலைஞர்

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

பரிமேலழகர்

(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரேபோல்-தம்மை யிழுத்துக்கொண்டு போகுமென்பதை அறிந்திருந்தும் வேகமா யோடுகின்ற வெள்ளத்திற் பாய்வார்போல் ; பொய்த்தல் அறிந்து புலந்து என்-ஊடல் நீடு நில்லாமை யறிந்திருந்தும் கணவரோடு ஊடி என்ன பயன்? புலத்தலால் துன்பமே யன்றி யின்பமில்லை யென்பதாம் . பாய்வார்போற் புலந்து என இசையும் . பொய்த்தலறிந்தே னென்பது பாடமாயின் , உய்த்தலறிய ஒடு நீருட் பாய்வார்போல முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை யறிந்தேன்;இனி இது செய்தற் பாற் றன்றென வுரைக்க என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருத்தமே. ஏகாரம் பிரிநிலை.

மணக்குடவர்

தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு? இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

புலியூர்க் கேசிகன்

ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப் போல, ஊடுதல் பயனில்லை என்பதை அறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன?

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal)