குறள் (Kural) - 1288

குறள் (Kural) 1288
குறள் #1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

பொருள்
என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

Tamil Transliteration
Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk
Kallatre Kalvanin Maarpu.

மு.வரதராசனார்

கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

சாலமன் பாப்பையா

இந்த வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.

கலைஞர்

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

பரிமேலழகர்

(தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு. (அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கள்வ-மாயக்காரரே!;நின் மார்பு-எங்கட்கு உம்முடைய மார்பு; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே-தன்னையுண்டு மகிழ்ந்தவர்க்கு இழிவுதரத்தக்க தீயவற்றைச் செய்யினும் , அவரால் மேன்மேலும் விரும்பப்படுவதாகிய கள்ளுப் போன்றதே. இன்னாதவை நாணின்மை,நிறையின்மை, உணர்வின்மை,ஒழுக்கமின்மை,துப்புரவின்மை முதலியன . எங்கட்கு நாணின்மை முதலியவற்றை நீர் செய்யினும் , எங்களால் மேன்மேலும் நீர் விரும்பப்படுவது வியப்பானதே யென்பதாம். அத்தகைய விருப்பமுண்டாமாறு மாயத்தொழில் வல்லீர் என்பாள் ' கள்வ' என்றாள் . ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர்

பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

புலியூர்க் கேசிகன்

கள்வனே! இழிவு வரத்தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவருக்கு மென்மேலும் ஆசையூட்டும் கள்ளைப் போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal)