குறள் (Kural) - 1285

குறள் (Kural) 1285
குறள் #1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

பொருள்
கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

Tamil Transliteration
Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan
Pazhikaanen Kanta Itaththu.

மு.வரதராசனார்

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

சாலமன் பாப்பையா

முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

கலைஞர்

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் - மற்ற நேரமெல்லாங் காணக்கூடியதாயிருந்தும் , கண்ணிற்கு மைதீட்டும்போது மட்டும் தீட்டுக் கோலைக் காணமுடியாத கண்ணேபோல ; கண்டவிடத்துக் கொண்கன் பழிகாணேன்-கணவரைக் காணாத விடத்தெல்லாம் அவர் தவற்றைக் கண்டிருந்து . அவரைக் கண்ட விடத்து மட்டும் அதைக் காணவியலாது போகின்றேன்.

மணக்குடவர்

கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

புலியூர்க் கேசிகன்

மை எழுதும் போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப் போல, என் காதலனைக் கண்டபோது, அவன் குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal)