குறள் (Kural) - 1284

குறள் (Kural) 1284
குறள் #1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

பொருள்
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

Tamil Transliteration
Ootarkan Sendrenman Thozhi Adhumarandhu
Kootarkan Sendradhu En Nenju.

மு.வரதராசனார்

தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

சாலமன் பாப்பையா

தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.

கலைஞர்

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

பரிமேலழகர்

(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தோழி-தோழீ ; ஊடற்கண் சென்றேன்-காதலரைக் காணுமுன் அவர் செய்த தவற்றை நினைந்து அவரோடு ஊடுதலை மேற்கொண்டேன் ; என்நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது-ஆனால் , அவரைக் கண்டவுடன் என் உள்ளமோ அதைமறந்து அவரோடு கூடுதலை மேற்கொண்டு விட்டது. அவரைக் கண்டவுடனேயே என் நெஞ்சு அறைபோனமையின் என் தீர்மானம் நிறைவேறவில்லை யென்பதாம். ஊடற்கண் சென்றதனால் என்ன பயன் என்பதுபட நின்றமையின் ' மன் ' ஒழியிசை, ஊடற்கண் சென்றதும் நெஞ்சேயாதலின் ' அது மறந்து' என்றாள் .

மணக்குடவர்

தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

புலியூர்க் கேசிகன்

தோழி! நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன்; ஆனால் என் நெஞ்சமோ, அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலேயே சென்றதே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal)