குறள் (Kural) - 1283

குறள் (Kural) 1283
குறள் #1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

பொருள்
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

Tamil Transliteration
Penaadhu Petpave Seyyinum Konkanaik
Kaanaa Thamaiyala Kan.

மு.வரதராசனார்

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா

என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

கலைஞர்

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

பரிமேலழகர்

(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பேணாது பெட்பவே செய்யினும் - நம்மைப் புறக்கணித்துத் தாம் விரும்பியவற்றையே செய்வாராயினும் ; கொண்கனைக் காணாது கண் அமையல-காதலரைக் காணாது என் கண்கள் அமைகின்றன வல்ல அத்தகைய கண்களை வைத்துக்கொண்டு நான் புலப்பதெங்ஙனம் என்பதாம் . தன்விதுப்புக்கண்மே லேற்றப்பட்டது . ஏகாரம் பிரிநிலை . எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.

மணக்குடவர்

தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

புலியூர்க் கேசிகன்

என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையவில்லையே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal)