குறள் (Kural) - 1282

குறள் (Kural) 1282
குறள் #1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பொருள்
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

Tamil Transliteration
Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith Thunaiyum
Kaamam Niraiya Varin.

மு.வரதராசனார்

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா

பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.

கலைஞர்

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

காமம் பனைத் துணையும் நிறைய வரின் -மகளிர்க்குக் காமம் பனையளவாகவும் நிரம்ப வுண்டாகு மாயின் ; தினைத் துணையும் ஊடாமை வேண்டும் -அவர் தம் காதலரொடு தினையளவும் ஊடுதலை மேற் கொள்ளா திருத்தல் வேண்டும் . ஊடின் புணர்ச்சி தடைப் பட்டுக் காம நோய் அள விறந்த துன் பந்தரு மென்று , பிறர்க்கு நல்லது சொல்வாள் போன்று தன் விதுப்புக் கூறியவாறு . தினை பனை யென்னும் அளவுப் பெயர்கள் முறையே சிற்றளவும் பேரளவும் உணர்த்தி நின்றன . உம்மையிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு ; பின்னது உயர்வு சிறப்பு.

மணக்குடவர்

நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின். இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது

புலியூர்க் கேசிகன்

பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதாகவேனும் ஊடிப் பிணங்காமல் இருத்தல் வேண்டும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal)