குறள் (Kural) - 1281

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
பொருள்
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
Tamil Transliteration
Ullak Kaliththalum Kaana Makizhdhalum
Kallukkil Kaamaththir Kuntu.
மு.வரதராசனார்
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.
சாலமன் பாப்பையா
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
கலைஞர்
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
பரிமேலழகர்
(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு.(களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
(பிரிதற் குறிப்பினனாகிய தலைமகனோடு நீ புலவாமைக்குக் காரணம் யாதென நகையாடிய தோழிக்குச் சொல்லியது .) உள்ளக் களித்தலும்-நினைத்தவளவிலேயே உள்ளங் கிளர்தலும் ; காண மகிழ்தலும்-கண்ட வளவிலேயே இன்புறுதலும் ; காமத்திற்கு உண்டு கள்ளுக்கு இல்-காம நுகர்ச்சிக்குரிய காதலன்(அல்லது காதலி)பற்றி யுண்டாகும், கடிப்பிற்குரிய கள் பற்றி யுண்டாகா. ஆதலாற் காதலன் முன்பு புலப்ப தெங்ஙனம் என்பதாம் . களித்தல் கள்ளுண்டு மகிழ்ச்சியடைதல் ; மகிழ்தல் கள்ளுண்டு வெறித்து இன்புறுதல் . இவ்விரண்டும் உண்டாலன்றி யின்மையின் ' கள்ளுக்கில்' என்றாள் . ' உண்டு' என்பது முன்னுஞ் சென்றியைதலால் இறுதிவிளக்கு . இதை ஒர் அணியாகக் கொள்வர்.
மணக்குடவர்
காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு. கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.
புலியூர்க் கேசிகன்
நினைத்த பொழுதிலே களிப்படைவதும், கண்டபொழுதிலே மகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளுக்குக் கிடையாது; காமத்திற்கு உண்டு
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal) |