குறள் (Kural) - 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
பொருள்
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
Tamil Transliteration
Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku.
மு.வரதராசனார்
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா
நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
கலைஞர்
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi) |