குறள் (Kural) - 1198

குறள் (Kural) 1198
குறள் #1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள்
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.

Tamil Transliteration
Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu
Vaazhvaarin Vankanaar Il.

மு.வரதராசனார்

தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

சாலமன் பாப்பையா

தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

கலைஞர்

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.

பரிமேலழகர்

(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மை உடையவர்கள், யாரும் இல்லை

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi)