குறள் (Kural) - 110

குறள் (Kural) 110
குறள் #110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

Tamil Transliteration
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku.

மு.வரதராசனார்

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

கலைஞர்

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

பரிமேலழகர்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-எத்துணப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத்தீவினைகள் நீங்கும் கழுவாய் ( பிராயச் சித்தம்) உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்கோ தப்பும் வழியே இல்லை. பேரறக் கெடுப்புகளாவன, ஆவின் மடியறுத்தலும் குழவிகளையும் நிறை சூலியரையும் தூய துறவியரையுங் கொல்லுதலும், ஊருண்ணுங் கிணற்றில் நஞ்சிடுதலும், இவை போல்வன பிறவுமாம்.

மணக்குடவர்

எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

புலியூர்க் கேசிகன்

எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal)