குறள் (Kural) - 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
பொருள்
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
Tamil Transliteration
Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum.
மு.வரதராசனார்
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
சாலமன் பாப்பையா
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
கலைஞர்
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
பரிமேலழகர்
கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
கொன்ற அன்ன இன்னா செயினும்-தமக்கு முன் பொருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்றபெருந் தீமைகளைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்-அவையெல்லாம் அவர் செய்த நன்மை யொன்றையே நினைத்த மட்டில் நன்றியறிவுடையார் மனத்தில் இல்லாமல் மறைந்துபோம். இஃது உண்மையான அல்லது தலையாய நன்றியறிவுடையார் செயலாம்.
மணக்குடவர்
தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.
புலியூர்க் கேசிகன்
ஒருவர் நம்மைக் கொன்றாற் போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal) |