குறள் (Kural) - 111

குறள் (Kural) 111
குறள் #111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பொருள்
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

Tamil Transliteration
Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin.

மு.வரதராசனார்

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா

பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

கலைஞர்

பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

பரிமேலழகர்

தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்-பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; தகுதி என ஒன்றே நன்று-நேர்மை என்று சொல்லப்படும் ஒர் அறமே நல்லதாம். தகுதி என்ற சொல்லால் இங்குக் குறிக்கப்பட்டது நடுவுநிலை. தமிழரின் ஏமாளித்தனத்தினால் 'யோக்கியதை' என்னும் வடசொல் வழக்கூன்றவே தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 'பகுதியான்' என்பது பகுதிதொறும் என்று பொருள் படுதலால், ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்தின் அருமை தோன்ற நின்றது.

மணக்குடவர்

நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

புலியூர்க் கேசிகன்

ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடைபெறுமானால், ‘தகுதி’ என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)நடுவு நிலைமை (Natuvu Nilaimai)