குறள் (Kural) - 108

குறள் (Kural) 108
குறள் #108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

Tamil Transliteration
Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru.

மு.வரதராசனார்

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

சாலமன் பாப்பையா

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

கலைஞர்

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

பரிமேலழகர்

நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நன்றி மறப்பது நன்று அன்று-ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று-அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது. நன்றி மறப்பதென்பது மறந்து ஈடான நன்மை செய்யாமையும் தீமை செய்தலுமாம். நன்றல்லது மறப்பதென்பது மறந்து எதிர்த் தீமை செய்யாமையும் நன்மை செய்தலுமாம்.

மணக்குடவர்

பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal)