குறள் (Kural) - 107

குறள் (Kural) 107
குறள் #107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

பொருள்
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

Tamil Transliteration
Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu.

மு.வரதராசனார்

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

சாலமன் பாப்பையா

தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

கலைஞர்

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

பரிமேலழகர்

தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். ('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,)

ஞா.தேவநேயப் பாவாணர்

தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு-தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை; எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்-ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவுடையோர். எழுவகைப் பிறப்பிலும் நினைப்பர் என்பது பகுத்தறிவிற்குப் பொருந்தாமையின், ஏழேழ் மக்கட் பிறப்பு என உரைக்கப்பட்டது. அதுவும் உயர்வு நவிற்சியே. ஏழேழு என்பது கழிநெடுங் காலத்தைக் குறிக்க வந்த இருமடி நிறைவெண். நீக்கின வினையின் விரைவும் நிறைவுந் தோன்றத் 'துடைத்தல்' என்றார்.

மணக்குடவர்

தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.

புலியூர்க் கேசிகன்

தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர், நன்றியுடையோர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal)