குறள் (Kural) - 1073

குறள் (Kural) 1073
குறள் #1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

பொருள்
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

Tamil Transliteration
Thevar Anaiyar Kayavar Avarundhaam
Mevana Seydhozhuka Laan.

மு.வரதராசனார்

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

கலைஞர்

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

பரிமேலழகர்

தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தேவரைப் போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல், தாம் விரும்புவன செய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)கயமை (Kayamai)