குறள் (Kural) - 1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
பொருள்
எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!.
Tamil Transliteration
Nandrari Vaarir Kayavar Thiruvutaiyar
Nenjaththu Avalam Ilar.
மு.வரதராசனார்
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.
சாலமன் பாப்பையா
நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.
கலைஞர்
எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!.
பரிமேலழகர்
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ்மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் - அவர்போல அவை காரணமாகத் தம்நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான். (நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவைதமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப் புகழ்முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலான், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
தமக்கு உறுதியானவை இவை என்று அறிவாரை விட, அவை அறியாத கீழ்மக்கள் நன்மையுடையவர்; அவர் போல, இவர் தம் நெஞ்சத்தில் கவலையில்லாதவர் ஆதலால்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | கயமை (Kayamai) |