குறள் (Kural) - 1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
பொருள்
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.
Tamil Transliteration
Akappatti Aavaaraik Kaanin Avarin
Mikappattuch Chemmaakkum Keezh.
மு.வரதராசனார்
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
சாலமன் பாப்பையா
தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.
கலைஞர்
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.
பரிமேலழகர்
கீழ் - கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும். (அகப்பட்டி: அகமாகிய பட்டி, பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார், 'நோதக்க செய்யும் சிறுபட்டி' (கலித்.குறிஞ்சி.15) என்றார் பிறரும்.)
புலியூர்க் கேசிகன்
கீழ்மக்கள் தம்மிலும் கீழாக நடப்பவரைக் கண்டால், அந்தக் கீழ்மையில் தாம் அவருக்கு மேம்பட்டிருப்பதைக் காட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | கயமை (Kayamai) |